கல்வி
எமது பாடசாலை 1823ம் ஆண்டு புலோலிக் கிராமத்தில் மெதடிஸ்த மிஷனரியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 1-8 வரையான வகுப்புக்களே காணப்பட்ட போதிலும் அதன் வளர்ச்சியின் உயர்ச்சியால் தரம் 1-11 வரையான வகுப்புக்களை உள்ளடக்கி ஆரம்பக் கல்வியை ஊட்டுகின்ற அதேவேளை இடைநிலைக் கல்வியையும் வழங்கி வருகின்றது.
இப்பாடசாலையைச் சூழவுள்ள அயற்கிராமங்களிலும் இன்று கல்வித்துறையில் சிறந்து விளங்கும் புத்திஜீவிகளின் ஆரம்பப் பாடசாலையாக இப்பாடசாலை அமைவது குறிப்பிடத்தக்கது.தற்போதைய எமது அதிபரின் ஆரம்ப்ப் பாடசாலையும் இதுவே ஆகும்.
எமது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களில் பலர் மிகவும் பின்தங்கிய சூழலில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். அந்நிலையிலும் அவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிபர், ஆசிரியர்களின் அயராத உழைப்பும் விடா முயற்சியும் ஊன்றுகோலாகி 21ம் நூற்றாண்டில் ஓர் உன்னத நிலையில் நிமிர்ந்து நிற்கின்றது.
இப்பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் இதன் கல்வி அபிவிருத்தி நிலையை எடுத்துக்காட்டுகின்றது.2002ம் ஆண்டில் கி.கிருஸ்ணமீனன் என்ற மாணவன் 120 புள்ளிகளைப் பெற்றிருந்தான்.தொடரந்து 2003 இல் உ.துளசிகன் 133 புள்ளிகளையும் ச.அனுதர்சன் 118 புள்ளிகளையும் பெற்றனர்.2004 இல் இ.ஜனகன் 128 புள்ளிகளையும் பி.கிறிஸ்ரின் ஈழவன் 124 புள்ளிகளையும் பெற்றனர். 2006 இல் ச.கஜமுகன் 144 புள்ளிகளையும் உ.சதுர்சனன் 141 புள்ளிகளையும் பெற்றனர். 2007 இல் பி.பிரகலாதன் 161 புள்ளிகளையும் ம.மோகனரூபி 154 புள்ளிகளையும் இ.அஜித் 144 புள்ளிகளையும் பெற்றனர். 2008 இல் செ.சாரங்கன் 121 புள்ளிகளையும் 2009 இல் ச.சங்கமன் 142 புள்ளிகளையும் பெற்றனர்.
ஆரம்பக் கல்வியின் வளர்ச்சியால் இம் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றமை குறிப்பிடத் தக்கது. 2009 ம் ஆண்டு இத் தேர்வில் 140 வெட்டுப் புள்ளியாக இருந்த நிலையில் மூன்று மாணவர்கள் 138 புள்ளிகளைப் பெற்றமை குறிப்பிடத் தக்கது.
பெற்றோரின் விருப்பிற்கிணங்க இத் தேர்வில் சித்தியடைந்த மாணவர்கள் பிரபல பாடசாலைகளுக்குச் செல்கின்ற போதும் தொடர்ந்து இடைநிலைக் கல்வியை இப்பாடசாலையிலேயே பளிலுகின்ற மாணவர்க்ள் நாங்கள் எமது பாடசாலைக்குப் பெருமையளிப்போம் என்று சபதமெடுத்து க.பொ.த.சா.த. பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றார்கள். இவர்களுடைய பெறுபேற்றுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள் இப்பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களுமே என்றால் மிகையாகாது.
க.பொ.த.சா.த பரீட்சையில் 2000 ம் ஆண்டு முதல் கணிசமான மாணவர்கள் சித்தியடைந்து உயரதர வகுப்புகளுக்கச் சென்றுள்ளனர்.
| ஆண்டு | சித்தியடைந்தோர் |
|---|---|
| 2000 | 5 |
| 2001 | 9 |
| 2002 | 5 |
| 2003 | 11 |
| 2004 | 2 |
| 2005 | 5 |
| 2006 | 8 |
| 2007 | 6 |
| 2008 | 8 |
| 2009 | 7 |
இப் பாடசாலையின் வளர்ச்சியின் உச்சமாயிருப்பது யாதெனில் இப்பாடசாலையிலேயே ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி என்பவற்றைப் பூர்த்தி செய்து பிரபல பாடசாலைகளில் உயர் கல்வியைப் பெற்ற மாணவர்கள் பலர். அவர்களில் சிலர் பல்கலைக் கழகங்களிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் சிறந்து விளங்கி வருவது சிறப்பம்சமாகும். குறிப்பிட்டு நோக்கின் சி.சிவரூபி, கி.சுரேக்கா, இ.சுபாஜினி,ஆ.பாமா,தே.இந்திரகுமார், வே.சகாயரூபி, து.நந்தினிதேவி, ஆகியோர் பல்கலைக் கழகங்களிலும் சி.சிவாஜினி, அ.நிலோஜினி ஆகியோர் கல்வியியற் கல்லூரியிலும் தமது மேற்படிப்பினை பயின்று வருகின்றார்கள். இவற்றில் சி.சிவரூபி என்பவர் மூன்று பாடங்களிலும் ”ஏ” தரத்தினைப் பெற்று மாவட்ட நிலையில் பத்தொன்பதாவது இடத்தில் இருப்பது இப்பாடசாலைக்கு பெருமையினை ஈட்டித் தந்துள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் உயர் சிந்தனையும் எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. 21ம் நூற்றாண்டில் வீறுநடை போடும் யுகத்தில் எமது பாடசாலை மென்மேலும் சிறந்து விளங்கி சிறந்த பெறுபேறுகளை நிலை நாட்டும் என்பதில் ஐயமில்லை. இறையருள் துணை கொண்டு எம் பாடசாலை தரத்திலும் வளர்ச்சியிலும் உயர எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்போமாக.
Last Updated (Monday, 15 November 2010 17:41)


